அரசுத் தலைவர் அநுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார்.அதில் உண்மை உண்டு.
தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்ரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொது வெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.
மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம்
தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தமது சொந்த மக்களுக்கு மது விற்கிறார்கள் என்பது தமிழ் பொது உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஒரு குற்றச்சாட்டு. சுமந்திரன் அதை நன்கு விளங்கி தனக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதனை திட்டமிட்டுக் கட்டமைத்து வருகிறார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை அல்லது எரிபொருள் விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை வாங்குகிறார்கள், மதுசாலைகளையும் எரிபொருள் விற்பனை நிலையங்களையும் தாங்களே நடத்துகிறார்கள் அல்லது தங்களுடைய பினாமிகளுக்கு ஊடாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியது அல்ல.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்டு.
ஆனால் தொகையாக ஒரு தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இதுதான் முதல் தடவை. அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தலாம், மக்கள் முன் அம்பலப்படுத்தலாம் அவமானப்படுத்தலாம்.
அவர்களுடைய வாக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய மதிப்பைக் குறைக்கலாம்.அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் தடுக்கலாம்.
ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவு
தமிழ்ப் பொதுப் புத்திக்குள் குடியாமை அதாவது மது அருந்தாமை என்பது ஓர் ஒழுக்கமாக கருதப்படுகின்றது.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய பல சான்றோர், துறைசார் நிபுணர்கள் மதுப்பிரியர்களாக இருந்திருக்கிறார்கள்;இருக்கிறார்கள்.
இங்கே பிரச்சினை எங்கு வருகிறது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான். அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவாக இப்பொழுது சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கின்றார்.
ஆனால் குற்றஞ்சாட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர் தான் இதுவரை குற்றச்சாட்டு தொடர்பாக தனது வாக்காளர்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கியிருக்கிறார்.ஏனைய யாருமே அது தொடர்பாக வாய் திறக்கவில்லை.
அரசுத் தலைவர் அந்தப் பட்டியலை வெளிவிடும்வரை காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டா இல்லையா என்பதனை தமது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு.
மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களில் மட்டுமல்ல காசுப் பெட்டி கைமாறியது,கள்ள டீல்கள் செய்தது போன்றவை தொடர்பாகவும் வாய்திறக்க வேண்டும்.இவை தொடர்பில் அவர்கள் கள்ள மௌனம் சாதிக்க முடியாது.
இவைபோன்ற விடயங்களில் தமது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற முடியாத அல்லது பதிலளிக்க முடியாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள்.
தென்னிலங்கையில் இப்பொழுது “அநுர அலை” ஒன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நோக்கு நிலையில் அது மெய்யான மாற்றம் இல்லைத்தான்.
ஆனாலும் அரசியலில் நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொது ஜன விருப்பத்தை அது மீண்டும் அரங்கில் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அந்த அலை தமிழ் மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் போட்டியிட வேண்டும். குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலை தேக்க நிலையில் வைத்திருப்பதற்கு பொறுப்பானவர்களும் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கைகள் வலிமையாக மேலெழுகின்றன.
தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்
பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், தமது மக்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க நேர்மையானவர்கள், தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக மேலெழுகின்றன.
இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சுமந்திரன் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமை உண்டு.
தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது.
ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா? ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார்.
அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார்.தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார்.அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான்.அதைவிட முக்கியமாக,தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் நடந்த பொழுது ஐ.நா கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது.அங்கே போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சஜித் பிரேமதாச பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை.
சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத அரசியல்வாதி
பொறுப்புக்கூறல் எனப்படுவது இறந்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு தலைவர் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எப்படிப் பொறுப்புக் கூறுவார்? இந்த விடயத்தில் பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு அரசியல்வாதி, தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கின்றார்?
தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றார்? பிரதான அரசியல் விவகாரத்தில் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஓர் அரசியல்வாதி தனது அரசியல் எதிரிகள் சலுகையாக மதுச்சாலை அனுமதிகளைப் பெற்றது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்.
தனது அரசியல் எதிரிகளை சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கும் அவர் எப்படிப்பட்ட ஓர் அரசியலை முன்னெடுக்கிறார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலைத்தானே முன்னெடுக்கிறார்? தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாரா?
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது குற்றங்கள் மிகுந்ததாக,கண்ணியமற்றதாக,நேர்மையற்றதாக மொத்தத்தில் பொறுப்புக்கூறத் தயாரற்றதாக மாறிவிட்டது.அதற்கு சம்பந்தரும் பொறுப்பு, சுமந்திரனும் பொறுப்பு. சுமந்திரனை குற்றஞ்சாட்டும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு.
ஆனால் அதைத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சக்திகள் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு பயன்படுத்துகின்றன. எப்படியென்றால், தமிழ் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளையே அவர்கள் முன் குற்றவாளிகளாகக் காட்டி, சிறுமைப்படுத்தி, கீழ்மைப்படுத்தி தமது சொந்த பிரதிநிதிகளை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள்
இது எங்கே கொண்டு போய்விடும்? தமது சொந்தப் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலைக்குப் பின் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே போகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
இதை இப்படி எழுதுவதற்காக இக்கட்டுரையானது மதுச்சாலை அனுமதிகளைப் பெற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தக்கூடாது என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள் அனைவரையும் தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால் அதனை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டும்.
தமிழ் மக்களை ஒரு இனமாகத் திரட்டுவது;தேசமாகத் திரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கு நிலையிலிருந்து செய்ய முடியாது.தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்வாதிகள் அதைச் செய்வது என்பது தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்க முற்படும் வெளித் தரப்புகளுக்குத்தான் சேவகம் செய்யும்.
மாறாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள்,கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள்,டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
-பொது எழுத்தாளர் Nilaa-