அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் வடக்கிற்கு விஜயம்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டோஹ் சோனெக் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க துணைத் தூதுவர் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

அமெரிக்க துணைத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

இதேநேரம், காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்திற்கச் சென்ற அமெரிக்க துணைத் தூதுவர் மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும்  அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக மன்னார் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.