நிதி நெருக்கடி காரணமாக மாதாந்தம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க போதுமான அளவு வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொல்கஹாவல- குருணாகல் ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசுக்கு கிடைக்கும் வருமானம் பெருமளவில் நின்று போயுள்ளதன் காரணமாக, இந்த வருடம் செலுத்த வேண்டிய மிகப் பெரிய தொகை பணத்தை செலுத்த முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.
உதாரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவு செய்துள்ள திட்டங்களுக்கு 100 பில்லியன் ரூபாவுக்கும் மேல் செலுத்த வேண்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய நிதி ஒழுக்கத்தை கையாள வேண்டிய நிபந்தனையின் அடிப்படையில், இந்த சிக்கலை தீர்ப்பதற்கு பணத்தை அச்சிடவும் முடியாது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.