அராயக பயங்கரவாதி இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக நியமனம். ; சிறீதரன்

இன்னொரு இனத்தின் மீது என்னத்தை ஏறினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது என பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வட்டார நிர்வாக தெரிவும், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு சில நாட்களாக இலங்கையிலே மீண்டும் ஒரு பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை கொண்டு வருகின்றார்கள். ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் மோசமான சரத்துக்கள் நீக்கப்பட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் நியாயமானதாக இருக்கும் என நாம் கருதினோம்.

ஆனால் புதிதாக வருகின்ற பயங்கரவாத திருத்தச்சட்டத்திலே, ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவர் மரண தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவார் என்று அதில் தெளிவாக சொல்லப்படுகின்றது.

இப்பொழுதுதான் சிங்கள மக்கள் விழித்துக் கொள்கின்றார்கள். சிங்கள இளைஞர் சகோதரிகள் போராட்டம் ஆரம்பித்து ஓராண்டை நெருங்கியிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் இந்த நாட்டில் ஒரு கொடூரமான மனிதரை தங்களுடைய போராட்டத்தின் ஊடாக அடித்து இந்த நாட்டைவிட்டே கலைத்தார்கள்.

கலைத்த பிற்பாடுதான், இந்த நாடு ஒரு புதிய மாற்றத்துக்குள் வந்தது. இந்த நாட்டுக்கு தற்பொழுது ஒரு ஜனாதிபதி வந்திருக்கின்றார்.

கச்சல் மாத்திரைகளை உள்ளெடுப்பதற்காக மேலே இனிப்பு பூசி தருவார்கள். அதுபோன்று ஜனநாயக முலாம் பூசப்பட்ட லிபரல்வாதி என்று சொல்லப்படுகின்ற ஒரு அராயக பயங்கரவாதி இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக நியமனம் பெற்றிருக்கின்றார்.

அவர் ஒருவர்தான் மக்களால் தெரிவுசெய்யப்படாமல், விகிதாசார பட்டியலிலே பாராளுமன்றத்துக்குள் வந்தார். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு ஆசனம் அதுவாகும். அந்த ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றம் வந்து, அங்கே ஏற்கனவே இருக்கின்ற கொள்ளையடித்த 134 பேருடைய வாக்குகளை பெற்று அவர் இந்த நாட்டுக்கு ஜனாதிபதி ஆகிவிட்டார்.

அவர் ஜனாதிபதி ஆகியதும், மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருகின்றார். அந்த சட்டத்தின் ஊடாக யாரும் நிமிர்ந்து பேச முடியாது. நீங்கள் முகநூலகளில் எல்லாம் இனி எழுத முடியாது. வட்ஸ் ஆப் மூலம் படங்களை அனுப்பினால் பிடித்து சென்று மரண தண்டனை விதிப்பார்கள். அவ்வாறு நடந்து காண்டால் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றோம்.

நானும் 6 தடவை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு போய் வந்தேன். இது பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் இருக்கின்ற விடயம். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மீண்டும் மக்களை தெருவுக்கு கொண்டுவரும் வேலையை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது.

குறிப்பாக சிங்கள மக்கள் ஒரு காலத்தில் உணரவில்லை. மன்னாரிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் என நாங்கள் எவ்வாறு கூடியிருந்து மெல்ல மெல்ல சென்றோம் என எண்ணிப்பாருங்கள். அந்த நேரம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நாங்கள் கொல்லப்பட்டோம்.

அந்த நேரத்தில் சிங்கள மக்கள் அதை உணரவில்லை. சிங்கள சகோதர சகோதரிகள் அதனை யோசிக்கவில்லை. ஆனால் இன்று அவர்கள் தலையைில் இந்த குண்டு மாறி விழுகின்றது. இன்னொரு இனத்தின் மீது என்னத்தை ஏறினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது.

ஜே ஆர் ஜெயவர்த்தன 40 வருடங்களிற்கு முன்னர் இந்த சட்டத்தினை கொண்டு வந்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் இருந்தபொழுது, 3 மாதங்களிற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாகவும், இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டனர்.

16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவில்லை. ஆனாலும் அதனை எதிர்க்காது விட்டது மாபெரும் தவறு. ஆனால் அவர் தீர்வும் தரவில்லை. மாறாக 40 வருடங்களிற்கு மேலாக கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள் போராளிகளையும் இந்த சட்டத்திற்கு ஊடாகவே இந்த மண்ணில் பலி கொடுத்திருக்கின்றோம்.

இவ்வளவும் நடந்ததற்கு பிற்பாடுதான் சிங்கள மக்கள் விழித்திருக்கின்றார்கள். இது மிகக் அகோரமான சட்டம். இந்த நாட்டு மக்களை பாதிக்கின்ற சட்டம். எங்களுடைய மக்களின் தலைக்கு திரும்பி வந்திருக்கின்றது.

நாங்கள் சுதந்திரமாக வாழவில்லை. எங்களைச்சுற்றி இராணுவ முகாம்கள்தான் இருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கு மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்ட திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றோம்.

நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் விடயத்தைக்கூட தொலைபேசி ஊடாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். உளவாளிகள் இருப்பார்கள். மோசமான உலகத்திற்குள்தான் கருத்துக்களைக்கூடி பேச முடியாமல் சுதந்திரமாக வாழ முடியாத இனமாக தன்னுடைய மொழி, பண்பாடு எனும் அடையாளத்தை நிரூபிக்க முடியாத இனமாகவும் நிலைநிறுத்த முடியாத இனமாகவும் நாங்கள் இருக்கின்றோம் என மேலும் கருத்து தெரிவித்தார்.