ஆர்ப்பாட்டக்களத்தை இல்லாமல் செய்ய ரணில் முயற்சி.

போராட்டத்தை முன்னெடுத்த ஒவ்வொரு நபர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பதிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டக்காரர்கள் எதிர்பார்க்காத வகையில் கடும் அடக்குமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பல அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் ஆகிய இடங்களை கையகப்படுத்த தலையிட்ட அனைத்து போராட்ட தலைவர்களின் தகவல்களையும் சேகரித்து பொதுச் சொத்து சட்டம் மற்றும் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த, பாதுகாப்புப் படையினர் தயாராகி வருகின்றனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையை தடுக்க முயற்சித்தவர்களில் சந்தேகத்திற்கிடமான நடத்தை கொண்டவர்களும் இருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்குகள் தொடர மேற்கொள்ளப்பட்டுள்ள முறைக்கமைய, போராட்டத்தை ஆதரித்த சட்டதரணிகள் சங்கம் உள்ளிட்ட எந்த ஒரு சிவில் அமைப்புக்கும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் தலையீடு செய்ய இடமில்லை என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்ட களத்தை இல்லாமல் செய்யும் முயற்சியில் ரணில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.