ஆஸ்கர் போட்டிக்கு தெரிவான படத்தின் சிறுவன் மரணம்.

ஆஸ்கர் போட்டிக்கு தெரிவான “செல்லோ ஷோ” திரைப்படத்தில் நடித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்திய மொழி திரைப்படமான “செல்லோ ஷோ” தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலி சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் கோலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

15 வயதான ராகுல் கோலியின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் கோலி நடித்துள்ள “செல்லோ ஷோ” திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாகும் முன்பே ராகுல் கோலி உயிரிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.