இந்திய கடற்பரப்பிற்குள் ஐந்து இலங்கை மீனவர்கள் கைது.

தமிழ்நாட்டின், கன்னியாகுமரி கடற்கரையில் 5 இலங்கையர்களுடன் மீன்பிடி படகொன்றை தடுத்து வைத்துள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு, தமது கண்காணிப்பு படகொன்றினால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டதாக கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் படகு இந்திய கடற்பரப்பிற்குள் இருந்ததாக கண்டறியப்பட்டதால், அதில் பயணித்த ஐந்து இலங்கை மீனவர்களுடன் குறித்த படகு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.