இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் கலவரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்த காரணத்தால் 127 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தின் மலாங் நகரத்தில் அமைந்துள்ள கஞ்சுருகான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. ஐபிஎல் போட்டியில் எப்படி சி.எஸ்.கே-வும், மும்பை இந்தியன்ஸும் பரம எதிரிகளோ, அதேமாதிரி இந்தோனேசியன் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் கலந்துகொள்ளும் பெர்சிபயா சுரபயா அணியும், அரேமா மலாங் அணிகளும் பரம எதிரிகள். இந்த இரு அணிகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. இதில் பெர்சிபயா சுரபயா அணி 3-2 என்கிற கோல் கணக்கில் அரேமா மலாங் அணியை வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த அரேமா மலாங் அணி ரசிகர்கள் பெர்சிபயா சுரபயா அணி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் கலவரமாகவும் வெடித்தது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதிலிருந்து தப்பித்து மைதானத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறியும், கூட்டத்தில் மிதிபட்டும் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்த கலவரத்தால் 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள 180 பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.