இரவு நேர பொருளாதாரத்திலேயே நாட்டுக்கு அதிக இலாபத்தை ஈட்டிக்கொள்ன முடியும். 

இரவு நேர பொருளாதாரத்திலேயே நாட்டுக்கு அதிக இலாபத்தை ஈட்டிக்கொள்ன முடியும். அதனால் சுற்றுலா பிரதேசங்களில் கடைத்தெருக்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கிலும் சுற்றுலா துறைகள் இனம் காணப்பட்டு அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகையும் ஆரம்பத்தில் ஒரு இலட்சத்தி 95 ஆயிரமாக இருந்து தற்போது அது 6 இலட்சத்தி 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் இறுதியாகும்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத பிரச்சினைக்கு ஓரளவு தீர்வுகாண முடியும் நம்புகின்றோம்.

அத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் சுற்றலா துறையிலேயே தங்கி இருக்கின்றது. எமது நாட்டைவிட பின்தங்கி இருந்த கிரீஸ் நாடு இன்று சுற்றுலாத்துறை காரணமாகவே முன்னேறி இருக்கின்றது,

அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 18வீதம் சுற்றுலா துறை ஊடாகவே பெறப்படுகின்றது. அதேபோன்று அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 54டொலர் பில்லியனாகும். அதனால் கிரீஸ் நாட்டை நாங்கள் முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும்.

மேலும் சுற்றுலா பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்., குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

கடந்த காலங்களில் சுற்றுலா வந்த பெண்கள் பல்வேறு பாலிய துன்புருத்தல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.அதனால் சுற்றுலா பொலிஸ் பிரிவை அபிவிருத்தி செய்து,  சுற்றுலா பிரயாணிகள் சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்படவேண்டும்.

அதேநேரம் சுற்றுலா பிரதேசங்களின் கடைத்தெருக்கள் 24மணி நேரமும் திறக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகளிடமிருந்து டொலர்களை தேடிக்கொள்ள முடியாமல் போகும்.

குறிப்பாக இரவு களியாட்ட விடுதிகள் 24மணி நேரம் திறக்கப்படவேண்டும். இரவு நேர பொருளாதாரம் மூலமே நாட்டின் பொருளாத்தில் 70வீதம் தங்கி இருக்கின்றது. பகல்நேர பொருளாதாரம் 30 வீதமே இருக்கின்றது. ஏனெனில் மதிய நேரத்திலே மக்கள் பல்வேறு தொழிகளில் ஈடுபடுகின்றனர்.

அதனால் இரவு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிங்கப்பூர, மலேசியா போன்ற நாடுகள் முன்னேற்றம்டைய காரணம் இரவு பொருளாதாரதமாகும். இங்கிலாந்து கடந்த வருடம் இரவு பொருளாதாரம் மூலம் 66பில்லியன் ஸ்டேலின் பவுன்களை லாபமீட்டி இருக்கின்றது.

அத்துடன் மக்கள் பொருள் கொள்வனவு செய்யும் இடங்கள் 24மணி நேரமும் திறக்கப்படவேண்டும். அதன் மூலமே சுற்றுலா பயணிகளின் கைகளில் இருக்கும் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும். இரவு 10மணிக்கு பின்னர் ஹோட்டல். மதுபான விடுதிகளை மூடிவிட்டு சுற்றுலாத்துறையை முன்னேற்றவும் முடியாது. நாட்டையும் முற்றேற்ற முடியாது.

அதேபோன்று வடக்கு கிழக்கில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம். 30வருட யுத்தம் காரணமாக இதனை செய்ய முடியாமல் போனது. 

வடக்கு கிழக்கு எமது நாட்டின் ஒரு பகுதி. அங்கு வித்தியாசமான கலாசாரம் இருக்கின்றது. 

அதனால் அந்த பிரதேங்களில் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களையும் இனம் கண்டு அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம் என்றார்.