2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
![](https://sirakukal.com/storage/2022/10/Fe8AeEsXoAAw1A--1024x1024.jpg)
அணி சார்பில் அதிகபடியாக, ஹசிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் நஸ்ரா சந்து 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அணி சார்பில் அதிகபடியாக பிஸ்மா மாரூப் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 04 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
![](https://sirakukal.com/storage/2022/10/Fe8aJRbWAAEW4OU-1024x1024.jpg)
இந்நிலையில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 74 ஓட்டங்களால் தாய்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
![](https://sirakukal.com/storage/2022/10/Womens-Asia-Cup-2022-INDvsTHA-1024x683.jpg)
அதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
![](http://sirakukal.com/storage/2022/10/Fe7dI3eWQAEZ-1g-819x1024.jpg)