ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி புதன்கிழமை பதவி விலகுவார் என்று சபாநாயகர் சனிக்கிழமை இரவு அறிவித்த போதிலும், அவர் உண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்வாரா என்பது நிச்சயமற்றது.
எவ்வாறாயினும், சனிக்கிழமை அன்று நாடு தழுவிய போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலில், கோட்டாபய தனது ஜனாதிபதி பதவியை ஜூலை 13 ஆம் திகதி இராஜினாமா செய்வதை உறுதி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு 115 பேர் ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
IMF உடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் தொடர்ந்து ஜனாதிபதி பதவியை ஏற்குமாறும் பல எம்பிக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர் தனித்தனியாக எம்.பிக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ,
மேலும் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டளஸ் அலகப்பெருமதான் இருப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் தொடர்ந்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்பார் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிலிருந்து விலகினால், பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக தற்காலிகமாக புதன்கிழமை பதவியேற்பார், இதன் போது பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.