இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கடன் தொகை.

நாட்டில் கடந்த வருடம் (2021) டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 9700 கோடி அமெரிக்க டொலர் கடன் சுமையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை கணக்காய்வு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான பிரான்ஸின் லெசார்ட்ஸ் வழங்கிய விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், நாட்டின் கடன் சுமை குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிக்கை செய்வதற்கும் கணக்காய்வு செய்யப்பட்டது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் இலங்கை 4700 கோடி அமெரிக்க டொலர் (47 பில்லியன்) வெளிநாட்டுக் கடனுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5000 கோடி டொலர் (50 பில்லியன்) உள்நாட்டு கடனுக்கு உட்பட்டது. தற்போது 50 பில்லியன் டொலர் கடன் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை கடனை கணக்காய்வு செய்தபோது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 203 ரூபாயாகும்.  

தற்போது டொலர் ஒன்றின் பெறுமதி 355 இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளமையினால் கடன் சுமை மேலும் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.