பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதான திலின தக்ஷிலா என்பவர் தயாரித்த தேங்காய் எண்ணெயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பயோடீசல் மாதிரிகளை விஞ்ஞான பரிசோதனைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு நடைமுறை தீர்வாக பயோடீசலைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தேங்காய் எண்ணெயில் இருந்து பயோடீசல் தயாரிப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதன்படி, குறித்த இளைஞனுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரதமர்,
இது தொடர்பான பரிசோதனைகளுக்கு உதவுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த திலின தக்ஷிலா,
தனது தயாரிப்பு உலக தரத்திற்கு ஏற்ப இயங்குவதை தனது தனிப்பட்ட சோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும், பயோ டீசல் சராசரி டீசலில் 10 சதவீதம் வரை செல்லக் கூடியது என்றும் கூறினார்.
பயோடீசலைப் பயன்படுத்தும்போது வாகனத்தில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைட்டின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இளைஞன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
எனவே, பயோடீசல் பயன்பாடு பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது என்றார்.
திலினாவின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், ஆய்வக அறிக்கை கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வக சோதனை மிகவும் சிக்கலானது மற்றும் கணிசமான நேரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.