பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர், பொருளாதார நெருக்கடியால், வேலை இழந்துள்ளனர், இதனையடுத்து, அதில் பலர், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் சிரமங்கள் பல குடும்பங்களை வறுமையின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாட செய்யற்பாடுகளில், இலங்கையில் பெரும் எண்ணிக்கையான மக்கள், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த மோசமான சூழ்நிலை நாடு முழுவதும் தற்காலிக விபச்சார விடுதிகளை உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் விபச்சார தொழில், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள பெண்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாலின உரிமைகளுக்காக பாடுபடும் ஸ்டேண்ட்-அப் மூவ்மென்ட் லங்கா (SUML) தெரிவித்துள்ளது
ஆடைத்தொழிலில் பணிபுரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பாலியல் தொழிலை நாடுகிறார்கள் என்று நிறுவனத்தின் செயல் இயக்குனர் அஷிலா டான்டெனியா இந்திய ஊடகத்திடம் கூறியுள்ளார்.
21 வயதான ரெஹானா என்று தமது பெயரை மாற்றிக்கூறிய பெண் ஒருவர், தாம் ஆடைத்தொழிலில் பணிபுரியும் ஒரு ஊழியராக இருந்து பாலியல் தொழிலாளியாக மாறியது பற்றிய தனது கதையை இந்திய ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்ததாகவும், பல மாதங்கள் விரக்திக்குப் பிறகு,தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் ரெஹானா கூறியுள்ளார்.
“கடந்த ஆண்டு டிசம்பரில், ஆடை தொழிற்சாலையில் வேலை இழந்தேன். பின், தினக்கூலி அடிப்படையில், வேறு வேலை கிடைத்தது. சில சமயங்களில், ஆட்பலம் குறைந்த போது, சென்று, வேலைக்குச் சென்றேன்.
ஆனால், என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. எனது மற்றும் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது, பின்னர், ஒரு ஸ்பா உரிமையாளர் என்னை அணுகினார், இதனையடுத்து, பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலாளியாக வேலை செய்ய முடிவு செய்தேன், என் மனம் அதை ஏற்க மறுத்தது. ஆனால் எனது குடும்பத்திற்கு பணம் மிகவும் தேவைப்பட்டது, என்று அவர் இந்திய ஊடகத்திடம் கூறியுள்ளார்.
நாற்பத்திரண்டு வயதான ரோசி, என்று தமது பெயரை மாற்றிக்கொண்ட ஒருவரும், பாலியல் தொழிலாளியாக மாறியவர்களில் இன்னொருவர் என இந்திய ஊடகம் தெரிவிக்கிறது.
ஏழு வயதான ஒரு குழந்தையின் தாயான அவர் விவாகரத்து பெற்றவர், அவர் தனது மகளின் கல்வி மற்றும் வீட்டு வாடகைக்கு போதுமான அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டியிருந்தது.
“பொருளாதார நெருக்கடியால் வருமானம் போதாது. என் குடும்பத்தின் வீட்டுத் தேவைக்கு பணம் போதாது. அதனால்தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாதத்திற்கு 20,000 முதல் 30,000 வரை சம்பாதித்த பெண்கள் மற்றும் பெண்கள் ஒரு நாளைக்கு 15,000-20,000 ரூபாய் பெறுவதுதான் பாலியல் தொழிலாளிகளாக மாறுவதற்கு முக்கிய காரணம் என்று நம்பப்படுகிறது.
ஆனால் அவர்கள், சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது