இலங்கையின் முழு சுகாதார சேவையும் இன்னும் சில தினங்களில் முடங்கும் என்பதால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தனிநபர்களின் துணிச்சலான முயற்சிகள் இருந்த போதிலும், ஒவ்வொரு வளமும் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டாலும், அந்தத் துறையின் அனைத்து சேவைகளும் சில நாட்களில் முடங்குவதனை தவிர்க்க முடியாது என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில், மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களைப் போலவே பிற மனித வளங்களின் மேலாண்மையும் இன்றியமையாதது என்பதை சங்கத்தின் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய சேவையை இடையூறு இன்றிச் செய்யும் வகையில், அவர்கள் பணியிடத்துக்குச் சரியான நேரத்தில் செல்ல வழக்கமான போக்குவரத்து முறை இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் சீர்குலைந்துள்ளதால் சுகாதார சேவை முற்றாக முடங்கும் விளிம்பில் இருப்பதாகவும், ஆட்சி மாற்றத்தின் மூலம் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தோல்வியடைந்த ஆட்சியாளர்களை அகற்ற அமைதியான போராட்டங்களை நடத்துமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.