பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய, இலங்கையிலிருந்து பயிற்சி பெற்ற தாதியர்கள் அனுப்பப்படுகின்றனர்.
பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்ற உள்ள பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கினார்.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன், வெலிசரவில் உள்ள சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனம் (IIHS) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தாதியர்களின் முதல் தொகுதியினருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, உரையாற்றிய அமைச்சர் சப்ரி, மிகவும் வளர்ந்த சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த தொழிலை நோக்கிய அவர்களின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும், அக்கறையுள்ள இலங்கை நிபுணர்கள் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்புவதில் நமது நாட்டின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்றார்.
“உங்களின் பெறுபேறு, எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் வாய்ப்புகளை உறுதி செய்யும்.
உங்களின் நிபுணத்துவம் மற்றும் பயிற்சி மூலம், இங்கிலாந்தில் எங்களின் நற்பெயரை தொடர்ந்து மேம்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
வெளிநாட்டு நாணயங்களை பெற்றுக்கொள்வதற்கான தேவையுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில், இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.