இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் குடும்பம் பலி ; கண்ணீருடன் அறிவிப்பாளர்

காசாவின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் செய்தியாளரும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் நசேர் மருத்துவமனைக்கு வெளியே நேரலையில் செய்தியை வழங்கிக் கொண்டிருந்த முகமட அபு ஹட்டாப் அரைமணித்தியாலத்தின் பின்னர் வீடு திரும்பியவேளை விமானக்குண்டு வீச்சில் பலியாகியதாக அவரது ஊடகம் அறிவித்துள்ளது.

அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

எங்களால் இதற்குமேலும் தாங்கிக்கொள்ள முடியாது நாங்கள் களைப்படைந்துவிட்டோம் நாங்கள் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திற்காக காத்திருக்கும் தியாகிகள் என அந்த அறிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசாமீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பாதுகாப்பே இல்லை நினைத்ததை செய்வதற்கான தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பசீர் தான் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு இது எங்களிற்கு பாதுகாப்பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஸ் என்ற அடையாளத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது வெறும் சுலோகம் மாத்திரமே எங்களிற்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் கவலை வெளியிட்டார்.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் பாலஸ்தீன மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக மாறியுள்ளன எங்கள் சகா முகமது அபுஹட்டாப் அரைமணித்தியாலத்திற்கு முன்னர்தான் இங்கிருந்தார்.

தற்போது அவர் தனது குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டு விட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.