கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல, மெல்ல திரும்பி வரும் நிலையிலும் பெரும்பாலான மக்களிடம், எதிர்கால வாழ்க்கை குறித்த விரக்தி மன நிலையே காணப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
அதன் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் விவரம் வருமாறு,
உலகத்திற்கே பெரும் நெருக்கடியை அளித்த கொரோனா தனிமனிதன் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தின் நிலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எண்ணி, எண்ணி அவர்களில் பலரும் மனச்சோர்வுக்கு ஆளாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2019-ம் ஆண்டுக்கு பிறகு 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதில் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானோர் பெண்கள் மற்றும் இளைஞர்கள்.
இவர்களுடன் ஏற்கனவே மன நல பிரச்சினைகளுக்கு ஆளானோர் முன்பு இருந்ததை விட கூடுதல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கு பிறகு உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதில் இளைஞர்கள், இளம்பெண்களே அதிகம்.
உலகில் 14 சதவீத இளையோர் மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வரும் ஆண்டுகளில் இதன் பாதிப்பால் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்து உள்ளது.
தற்போது 100 இறப்புகள் நிகழ்ந்தால் அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவராக இருக்கிறார். மேலும் தற்கொலை செய்பவர்களில் 58 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறைகள், கொடுமைகள், பழிவாங்குதல் போன்றவையே தற்கொலைக்கு தூண்டுவதாக அமைகிறது. உலக மக்கள் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும்.
இதனை தடுக்க அனைத்து நாடுகளும் மக்களின் மனச்சோர்வை போக்க தேவையான நடவடிக்கைககளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் மனநல பிரிவு நிபுணர் மார்க் வான் ஓமரான் கூறும்போது, மக்களிடையே தற்போது மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி உலக நாடுகள் மனநலம் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக உலக நாடுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நல்ல மனநலமே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும், என்றார்.