உலகின் மனசாட்சியை உலுக்கிய வியட்நாம்  சிறுமி ! – தற்போது எப்படியுள்ளார்

வியட்நாம் போரில் மிகவும் பிரபலமான சிறுமி, தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நாம் அனைவருக்கும் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போர்தான் தெரியும். ஆனால் அதற்கு முன்பு இந்த உலகம் எத்தனையோ போர்களை கண்டுள்ளது. அதில் மறக்கமுடியாத ஒரு போர் என்றால் 1955 முதல் 1975 வரை நடந்த வியட்நாம் போர்தான்.

உலகையே உலுக்கிய அந்த போர் முடிய ஒரு 9 வயது சிறுமிதான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால் அது தான் உண்மை.

1955 இல் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் மீது போர் புரிந்தது. இந்த போரில் தெற்கு வியட்னாமுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து தனது படைவீரர்களை அங்கு போரிட அனுப்பியது.தொடர்ந்து 19 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில், 1972 ஆம் ஆண்டில் பெட்ரோலிய ரசாயனம் கலந்த நேபாம் குண்டுகளை (Nepalm bomb) அமெரிக்க ஜெட் விமானம் வடக்கு வியட்னாமில் வீசியது.

அப்போது அங்கிருந்த 9 வயது சிறுமி ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடி வந்தார். இதனை நிக் வுட் என்ற போட்டோகிராபர் படம் பிடித்தார். இதையடுத்து இந்த புகைப்படங்கள் உலகம் முழுக்க வலம் வந்த நிலையில், பல்வேறு நாட்டினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுமட்டுமின்றி அமெரிக்கா நாட்டினரே அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கினர். இதைப் போன்ற கடும் எதிர்ப்புகளால் அமெரிக்கா தனது படையை திரும்ப பெற்றது.

அந்த புகைப்படத்தில் இடப்பெற்றிருந்த சிறுமியின் பெயர் பான் தி கிம் பூஃக். நேபாம் குண்டால் பாதிக்கப்பட்ட இவர் “நேபாம் பெண்” என்றே அறியப்படுகிறார். தற்போது இவருக்கு 59 வயதாகிறது.

தீக்காயங்களுடன் தப்பித்த இவரை, மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இவருக்கு சுமார் 17 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளடைவில் தீக்காயங்களோடு தனது வாழ்க்கையை வாழ பழகிய இவர், கடந்த 1992 ஆம் ஆண்டு தனது கணவருடன் கனடா நாட்டிற்கு சென்றார். தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நாட்டின் மூலமாக ஏற்பட்ட காயங்களுக்கு தானே தீர்வு வழங்குவதாக கூறி, அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்த நிலையில் தற்போது நலமாக உள்ளார்.

இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியானது, அன்று இவரை புகைப்படம் எடுத்த அதே புகைப்படக்காரர் நிக் வுட்டுக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து , மருத்துவமனைக்கு வந்த நிக் மீண்டும் இவரை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.