ஏரியில் மீன்பிடித்த நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் பிரதீஷ் (12). அதேபோல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரது மகன் அன்பரசு (15).

நண்பர்களான பிரதீஷ் மற்றும் அன்பரசு இருவரும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் ஏரியில் கரையோரம் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கால் இடறி இருவரும் ஏரியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் உடனே ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.