ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர்  200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள  சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலை கொடியேற்ற உற்சவத்துக்கு சென்ற மக்கள் சிலர் அங்கு பால் தேநீர் பருக சென்ற போது  ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாக்கு விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் கூட ஒரு கோப்பை பால் தேநீர் இவ்வளவு விலைக்கு விற்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள், இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்வதை நுகர்வோர் அதிகார சபையினரும் கண்டுகொள்வதில்லை  என குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குறித்த உணவகத்தின் உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில்  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.