ஓரு மாதத்தில் 21 பேர் சுட்டுக்கொலை

நாட்டில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், கொலன்னாவையிலும் நேற்று (30.06.2022) மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்ட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், கொலன்னாவை சந்தியில் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  38 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த மே 30 முதல் ஜீன் 30 வரையிலான ஒரு மாத காலத்தில் நாடெங்கும் 21 பேர்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

கடந்த மே 30 ஆம் திகதி புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையம் முன்பாக நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வழக்கொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த  இராணுவத்தின் முன்னாள் வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.அ த்துடன் மற்றொரு  முன்னாள்  இராணுவ வீரர் காயமடைந்தார்.  

இந்த துப்பாக்கிச் சூடானது,  அளுத்கமவில்  கடந்த 3 ஆம் திகதி கொல்லப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை ( மச்சினன்) இலக்கு வைத்தது எனவும், வழக்கொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த இராணுவ வீரர்கள்  ஆள் அடையாளம் மாறியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த உறவினர், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனைசெய்யப்பட்ட வழக்கின் அரச சாட்சியாளர் என  கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாணந்துறை, அளுத்கமை, அஹங்கம,  தங்காலை, வத்தளை,மட்டக்குளி,  களனி,மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

போதைப் பொருள் தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு தகவல் அளிக்கும்இ சாட்சியாளர்களை இலக்கு வைத்து அண்மைய நாட்களாக தொடர்ச்சியான இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்று வருகின்றமை நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து தப்பியோடி  வெளிநாடுகளில் மறைந்து வாழும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையோர் ஒன்றிணைந்து இந்த கொலைகளை அரங்கேற்றுவதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்த உளவுத் தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில்  இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளை முன்னெடுத்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளாக செயற்பட்ட  சந்தேக நபர்கள் ( தங்காலை சம்பவத்தை தவிர) எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.