கணவன் போதையில், மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்!

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  (06/08/2022) உத்தரவிட்டார்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன்  நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.

இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.