காதுகளை சுத்தம் செய்வதற்கு ஹெட்போன் வடிவிலான கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
காதுகளில் இயற்கையாக உருவாகும் “ஏர்வேக்ஸ்” எனப்படும் மெழுகானது, கிருமிகள், தூசுகள் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
அதே மெழுகு அளவுக்கதிகமாக காதுகளில் சேரும்போது, கேட்கும் திறன் குறைவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்த நேரங்களில் உருவாகும் ஒரு வித உறுத்தல் இயல்பாகவே நம்மை காதுகளை சுத்தம் செய்யத் தூண்டி விடும்.
அது போன்ற நேரங்களில் பாதுகாப்பாக காதுகளை சுத்தம் செய்ய, ஹெட்போன் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள “ஓட்டோசெட்” (Otoset ) என்ற இந்தக் கருவியை காதில் பொருத்திக் கொண்டால், தானியங்கி முறையில் தண்ணீர் காதுக்குள் தெளித்து, சுத்தம் செய்தபின் மீண்டும் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
தற்போதைக்கு மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியின் விலை இந்திய மதிப்பில் இரண்டரை லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.