கிளிநொச்சி போத்தல் தண்ணீரில் உயிர் வாழும் காலம் விரைவில்…. 

ஒவ்வொரு மனிதரும் வாழ்வது அவனது சந்ததிக்காக, என்றுதான் உலக நீதி சொல்கிறது. சாதாரணமாக ஒருவரை நீங்கள் கேட்டுப்பாருங்கள்.

அவர் ஓய்வின்றி உழைப்பார். சேர்ப்பார். சொத்துகளில் முதலீடு பண்ணுவார். பிள்ளைகளை நல்ல பாடசாலையில் சேர்ப்பார். அதன் பிறகும் அவர்களை தனியார் கல்விக்காக நல்ல பாடசாலையில் சேர்ப்பார். அதன்பிறகும் அவர்களை தனியார் கல்வி நியைங்களுக்கு ஏந்திச் செல்வார். ஓய்வின்றி கணவனும் மனைவியும் ஓடிக்கொண்டிருப்பார்கள்..

சொல்லப்போனால் கணவனுக்கும் மனைவிக்கும் இது தவிர்க்கமுடியாத தவிர்க்க விரும்பாத ஒரு செயலாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக.
அவர்களுக்காகத்தான் உழைக்கிறோம். அவர்களுக்காகத்தான் சேர்க்கிறோம் என்று சொல்லாதவர் யார்? உலகம் எவ்வளவு வேகமாக சுழல்கிறதோ அதைவிட வேகமாக இவர்கள் அலைகிறார்கள்.

அவர்கள் உண்மையில் தமது சந்ததிக்காக எதை செய்கிறார்கள் என்பதை கவனித்தால், அவர்களது சந்ததி இந்தமண்ணில் வாழ முடியாமல் போவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள்.

முதுமை ஆட்கொண்டு, நடை தளர்ந்து நோயும் நோய்கண்டு படுத்த பாயுமாக இருக்கும் ஒருவர் தனது வீடை பெரிதாக கட்டிக்கொண்டிருக்கிறார். அதில் அவர் வாழப் போவது நிச்சயமில்லை. கேட்டால் மகனுக்காக மகனின் பிள்ளைகளுக்காக என்கிறார். ஆனால் அவர் அந்த வீட்டை உண்மையில் தனது சொந்த நிலத்தில்
கட்டவில்லை.

பொதுமக்களின் சொத்தை அபகரித்து அதில்தான் கட்டுகிறார்கள். இவருக்குப் போட்டியாக மேலும் பலர் இவ்வாறு வீடுகளைக் கல்லடுக்கி கட்டினாலும் அது
அவர்கள் எதிர்கால சந்ததிக்காக கட்டிவிடும் கல்லறை என்பதை அறிய மாட்டார்கள்.

கிளிநொச்சியின் பிரதான அழகும் வளமும் பெருமையும் கிளிநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குளத்தில் தான் தங்கியுள்ளது.

பரந்தன் வரையுள்ள பசுமை போர்த்த வயல்கள், நகரம் முழுமைக்குமான கிணறுகளின் நன்நீர், வரட்சியற்ற குளிர்மையான நீரைத்தடவி வரும் காற்று, திரும்பிய பக்கமெல்லாம் சிறகு விரித்தாடும் தென்னை மரங்கள். அவற்றின் மருங்கே கிடக்கும் பழமரங்கள், நாற்புறமும் சூழ ஓடிக்கொண்டிருக்கும் அழகிய வாய்க்கால்களும் தெளிந்த நீரும், பருவ காலங்களில் கிழக்கே வெண்தாமரையும் மேற்கே செந்தாமரையும் பூத்திருக்கும் அழகு.

நடுவே எதுவித களங்கமுமற்று தெளிந்த நீரின் சிற்றலைகளின் வீச்சும்,அதன் மீது லாவகமாக பாய்ந்து மீன் கொத்திவிளையாடும் நீர்ப்பறவைகளும், கரையோரமாக கசிந்து பீறிட்டுப்பாயும் பரவிப்பாஞ்சான் சிற்றாறும், கிளிநகரின் அழகுக்கு அழகு செய்கிறது

என்றாலும் ரோசாவில் முள்ளிருப்பது போல அழகான நாகத்தின் விசம் போல கிளிநொச்சிக் குளத்தின் முதலைகளும் கவரக்கொய்யாக்களும் ஒரு எச்சரிக்கைதான்.

அண்மையில் ஆடு, மாட்டுக்கன்று, நாய்கள், கோழிகள் என சுவைத்த பரவிப்பாஞ்சான்
முதலை ஒரு பெண்ணைப்பிடித்து மோசமாகக் குதறியிருக்கிறது. அது தனது வீட்டில்தான் இருக்கிறது. எதுவும் செய்துவிட முடியாது சில வருடங்களின் முன் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து கோழிகளை தின்று தள்ளிய வரலாறும் உண்டு.

ஆனால் வளக்கேதும் போட முடியாது அது குளம். குளத்துக்குள் முதலைகளின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது அந்த மனிதர்கள்தான். எனவே ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அந்த மனிதர் இப்போது பெரியளவில் பாதுகாப்பரண் ஒன்றை கட்டுவதாக தெரிகிறது.

கிளிநொச்சிக்குளம் இரணைமடு நீரைப் பெற்று வழங்கும் குளமாகவே அமைந்துள்ளது. அதனால் இதற்கு இயற்கை அரண்கள் எதுவும் பலமாக இல்லை.
இதன்கீழ் பரந்தன் உமையாள்புரம் உருத்திரபுரம் வரையும் அது கடந்தும் நீரை கொண்டு செல்ல வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மருதநகர் இதன் தொடக்கமாக இருக்கிறது. வட்டக்கச்சி வீதியிலிருந்து மருதநகருக்கு இறங்கும் வீதியின் கிழக்குப்புறமாக ஒரு துருசும், அதற்கான வாய்க்காலும் இருந்தது.

ஆனால் அந்த வாய்க்காலின் மேலாக காணிகளைப் பிடித்து வீடுகளைக்கட்டி அதன் முகவரியே இல்லாமல் செய்துவிட்ட தனக்காரர்களால் இப்போது அந்த துருசையே காணாமல் ஆக்க முடிந்துள்ளது. அதன் கிழக்கேயான வயல்களுக்கு பரவிப்பாஞ்சான் ஆற்றின் நீரை வீதியை மறித்துச்செல்லும் கால்வாய் விளங்குகிறது அதனால் முன்புறம் நீரைப் பெற முடியாத பல ஏக்கர் நிலங்களுக்கு பின்புறமாக வரும் வாய்க்கால் பயன்படுகிறது முன்பறம் மதில்களால் பழைய வாய்க்கால் மறைக்கப்பட்டுவிட்டது.
(பழைய காணிகளின் வரைபடத்தை பார்க்கவும்.)

நீர்ப்பாசன திணைக்களம் குடிநீர் வழங்கல் செய்வதற்பகான வேலைகளைத் தொடங்கி நீண்ட காலமல்லவா? அவர்களது திட்டப்படி குளத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் சில குழாய் நீரைப் பெறுகின்றன.

யுத்த காலத்தில் எட்டு வீடுகளும் அதன் பின்னாக ஏக்கர் கணக்கில் பரந்திருந்த மேய்ச்சற் தரவைகளும் இருந்தன.

அதிகளவான விவசாய செய்கைக் காலத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்காக அங்கு கொண்டு வருவார்கள். சுமார் ஐநூறு மாடுகளுக்கு மேல் அங்கு மேயும். அவை தண்ணீர் குடிக்க குளமிருந்தது. மாலை மூன்று மணியளவில் அதை மேய்ப்பவர் அவற்றை ஓட்டிச் செல்வார்.

இப்போது அந்த மேச்சற்றரவை காணாமல் போயுள்ளது. அதில் பல மாடிக்கட்டடங்கள். கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய வீடுகள் திட்டமிட்ப்பட்டு நிலத்தில் மண்கொட்டி நிரப்பி அமைக்கப்படுகிறது.

ஏக்கர் கணக்கில் நிலம் குளத்தின் நீரேந்து பரப்பில் மண் கொட்டி மூடப்படுகிறது. நாளாந்தம் நள்ளிரவில் கனரக வாகனங்களின் இரைச்சல் தூக்கத்தை கெடுக்கின்றன. கடபுடா சத்த்துடன் பொருட்கள் பறிக்கப்படுகின்றன.

காலையில் வீதியை மறித்து கொட்டியவை வளவுகளுக்குள் சென்று குளத்தில் கொட்டப்படுகிறது.

இதை தடுப்பவர் யார்?

அருகிலேயே பொலீஸ் நிலையம்.
மிக அருகிலேயே நீர்ப்பாசன திணைக்களம்.
பிரதேச சபை பிரதேச செயலகம் மாவட்டசெயலகம் எல்லாமே  சூழ அமைந்திருக்கும் இடத்தில் குளம் காணாமல் ஆக்கப்படுகிறது.

ஒரு சிலரின் தேவைகளுக்காக ஊர் கொள்ளையடிக்கப்படுகிறது.  

எப்படி  இப்போது அம்பாள் குளம் காணாமல் போயிருப்பது போல அந்தப் பிரதேச கிணறுகள் அனைத்தும் வரண்டு போனது போல கிளிநொச்சி நகரம்
போத்தல் தண்ணீரில் உயிர்வாழப்போகும் காலம் நெருங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் வாழும் மக்கள் தமது தென் னைமரத்து ஓலைகளை குளத்தில் ஊறப்போட்டு கிடுகு பின்னி விற்று குடும்பச்செலவை சமாளித்தார்கள் இன்று தென்னோலைகள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன.

காரணம் குளத்திற்கு மக்கள் செல்லும் வழிகள் இந்த காணி அபகரிப்பாளர்களால் மதில்கட்டி அடைக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்த்தவர்கள் அவற்றை
விற்றுவிட்டார்கள் அவைகள் நீர் அருந்த இடமில்லாமல் தொலைவுக்குப் போய் தொலைந்து போகின்றன. இதற்கெல்லாம் தீர்வு யார் தரப் போகிறார்கள்?

கிளிநொச்சியின் அழகான பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து இந்தக்குளம்.

இதன் அருமை தெரியாமல் அமைதியாக இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

எப்படி இந்த குளத்தை காப்பாற்றப்போகிறோம், மேலும் மேலும் காணிகள் பெருத்து நடுக்குளத்தை எட்டியுள்ளது.

யாரோ கல்வியறிவற்ற குடிநிலமற்ற ஏழைகள் இதை செய்யவில்லை.

கோடீஸ்வரர்களால் திருடப்டபடுகிறது.

அதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இதேவேளை,
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கள் இட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எல்லை கற்கள் கொள்வனவு செய்யப்பட்டு தயாராக உள்ள போதும் அவற்றினை கொண்டு குளங்களுக்கு எல்லையிடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தயாராக இல்லாதிருப்பது கவலையளிக்கிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.  கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 25 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிது புதிதாக சிலர் மண் நிரப்பி குளங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் உட்பட மிக மோசமான சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும், அருகிச் செல்லும் நிலத்தடி நீரையும் இல்லாது செய்துவிடும் எனவே இதனை கருத்தில் எடுத்து குளங்களை பாதுகாக்க வேண்டும் அதற்கமைவாக குளங்களுக்கு எல்லையிடுதல் அவசியமாகும்.

வனவளத்திணைக்களம் தங்களின் காடுகளை பாதுகாக்க எல்லை கற்களை பதித்தது போன்று குளங்களுக்கும் எல்லை கற்களை பதிக்க வேண்டும்.

ஆனால் துரதிஸ்டவசமாக கற்கள் தயார் நிலையில் உள்ள போதும் திணைக்களம் நடவடிக்கை எடுக்காதிருப்பது கவலைக்குரியது. எனவே இனியாவது குளங்களை பாதுகாக்கும் அக்கறையுடன் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர்.