குஜராத்தை வீழ்த்தி நேரடி வெற்றியை தனதாக்கிய சென்னை

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக்கின் 7ஆவது போட்டியில் குஜராத்தை 63 ஓட்டங்களால் வீழ்த்திய நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருடம் தனது 2ஆவது நேரடி வெற்றியை சுவைத்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட  அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் மூவரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஒவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 32 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரச்சின் ரவீந்த்ரா 20 பந்துகளை எதிர்கொண்டு  6 சிக்ஸ்கள், 3 புவுண்டறிகள் உட்பட 46 ஓட்டங்களை விளாசினார்.

அஜின்கியா ரஹானே 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற போதிலும் 2ஆவது விக்கெட்டில் ருத்துராஜ் கய்க்வாட்டுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ரஹானேயைத் தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாட் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (127 – 3 விக்.)

அடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே, டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்க உரமூட்டினர்.

ஷிவம் டுபே 23 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார்.

சமீர் ரிஸ்வி (14), ரவீந்த்ர ஜடேஜா (7) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.  

டெரில் மிச்செல் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ராஷித் கான் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆரம்பம் முதல் அழுத்தத்துடன் பதிலளித்து துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மூன்று வீரர்கள் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் அவர்கள் மூவரும் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தனர்.

அணித் தலைவர் ஷுப்மான் கில் வெறும் 8 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ரிதிமான் சஹா 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்ததாக விஜய் ஷன்கர் 12 ஓட்டங்களுடன் வெளியேற 8ஆவது ஓவரில் குஜராத்தின் மொத்த எண்ணிக்கை 55 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் சாய் சுதர்சன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் டேவிட் மில்லர் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 18 ஓட்டங்கள் சேர்ந்தபோது சாய் சுதர்மன் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அத்துடன் வெற்றிபெறலாம் என்ற குஜராத் ஜயன்ட்ஸின் அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போனது.

தொடர்ந்து அஸமத்துல்ல ஓமர்ஸாய் (11), ராஷித் கான் (1), ராகுல் தெவாட்டியா (6) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

உமேஷ் யாதவ் 10 ஒட்டங்களுடனும் ஸ்பென்ஸர் ஜோன்சன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.