குருந்தூர் மலை. ; நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக திரண்ட மக்கள் போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தினால் மக்களின் வயல் நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம்  நில அளவை திணைக்களம் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

632 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்திற்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, மக்களின் வயல் நிலங்களில் தொல்பொருள் திணைக்களம் எல்லை கற்களை போட்டுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள், பொது அமைப்பினரின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தினை  மேற்கொண்டுள்ளதுடன், குருந்தூர்மலையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த விகாரையின் கட்டுமான பணிகளையும் நிறுத்துமாறும் நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதன் போது சம்பவ இடத்திற்கு பொலீசார் குழு ஒன்று வருகைதந்து உள்ளதுடன் போராட்டக்காரர்களுக்கும்  பொலீசாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

குருந்தூர் மலைப்பகுதி மற்றும் குருந்தூர்குளம், அதன் கீழான வயல் பகுதி மற்றும் மக்களின் காணிககள் காடுகள் என 632 ஏக்கர் நிலத்தினை தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு அதன் முதற்கட்டமாக எல்லைக்கற்கள் நாட்டும் நடவடிக்கை கடந்த 11.09.2022 அன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் எதிர்பினை வெளிப்படுத்தி விட்டு விகாரைப்பகுதிக்கு சென்று அங்கே மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை பார்வையிட்டுள்ளார்கள்.

 நீதிமன்ற உத்தரவினையும் மீறி அங்கு கட்டுமானங்கள் இடம்பெற்று வருகின்றமையினை அவதானித்த மக்கள்  அங்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்

குருந்தூர் மலையில் மக்கள் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குருந்தூர் மலை கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்கள் மக்களை கண்டதும் சீமேந்து, கற்கள் உள்ளிட்டவைகளை வைத்த இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

 சம்பவ இடத்தில் பதற்றமான நிலையினை தொடர்ந்து அங்கு நின்ற தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரால் முல்லைத்தீவு பொலீஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கலகம் அடக்கும் பொலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வருகைதந்து கண்காணித்துள்ளதுடன் மக்களை நீதிமன்றம் சென்று முறையிடுமாறு தெரிவித்துள்ளார்கள்.

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் உரத்த குரல்கொடுத்துவிட்டு கலைந்து சென்றுள்ளார்கள்.