குழந்தைக்கு காய்ச்சல் வர காரணம்?

சில குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை, அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதுண்டு.

இதனால் காய்ச்சல், சளி திடீரென வரக்கூடும். காய்ச்சல் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்பட்டாலும், சில சமயம், வேறு காரணங்களுக்காகவும் வரும். அப்படி ஒன்று தான் காதில் வரும் தொற்றும்.

இதனால் காது வலி வரக்கூடும்.

சின்ன குழந்தைகளுக்கு வலிகளை விவரிக்க தெரியாது என்பதால் பெற்றோர்தான் காதைத் தடவி தடவி வலியுள்ள பகுதியைக் கண்டுபிடித்து கவனிக்க வேண்டும்.

வலியின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம்.

எப்படி அறியலாம்:

குழந்தைக்கு காது வலியை அறிந்து கொள்ள அதன் செயல்பாடுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். வலியின் காரணமாக குழந்தை காதைப் பிடித்து இழுப்பது முதல் அறிகுறியாகும். மேலும் குழந்தைகள் தூங்கவும், சாப்பிடவும் அடம் பிடிக்கும். சில சமயம் காதுகளிலிருந்து திரவம் வெளியேறும். இவை எல்லாம் காதுத் தொற்றுக்கான அறிகுறிகள்.

எதனால் வரும்:

பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறையாவது காது வலி வரும். மேலும் அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் போதும் வலி வரும். தொண்டைப் புண் வந்தாலும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு வலி வரும்.

காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என நினைத்து அடிக்கடி சுத்தம் செய்வதாலும் வலி வரும். குழந்தைகளின் காது சவ்வு மிருதுவாக இருக்கும். அதனால் அதில் அடித்தால் சவ்வு கிழிந்து வலி ஏற்படும். குழந்தையை குளிப்பாட்டும் போது, காதில் சில சமயம் நீர் இருந்து கொண்டு தொற்று ஏற்பட்டு வலி வரலாம்.

எப்படி தவிர்க்கலாம்?:

• தாய்ப்பாலில் அதிக அளவில் ஆண்டி பாடிகள் உள்ளதால் ஒரு வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். அது குழந்தையை காது தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

• குழந்தையின் தலையை உயர்த்தி அரை நிமிர்ந்த நிலையில் அமர வைத்து பாட்டிலில் பால் கொடுக்க வேண்டும்.

• அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையை ஏசி ரூமில் படுக்க வைப்பதைத் தவிர்க்கலாம். மேலும் குழந்தையை அதிக வெயிலிலும் அதிக குளிரிலும் நேரடியாக எடுத்து செல்ல வேண்டாம்.

• குழந்தைகள் அடிக்கடி கை விரல்களை காதில் வைக்கும். அதன் மூலம் கிருமி பாதிக்காமல் இருக்க கைகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

• சளி, இருமல் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

• வீட்டு வைத்தியம் செய்த பிறகும் குழந்தைக்கு காது வலி குறையாமல் அதிகரித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.