இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி அடுத்துள்ள ஐந்தாம் மணல் திட்டில், கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கைத் தமிழர்கள் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ராமேஸ்வரம் கடலோர காவற்படை காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை நாட்டுப்படகில் விரைந்து சென்று மணல் திட்டில் தவித்து வந்த இலங்கைத் தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர்.
கடலோர காவற்படையினர் நடத்திய விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சப்ரீன், அவரது மனைவி ராதிகா, அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் 6 மாத ஆண் கைக்குழந்தை என மொத்தம் 5 பேர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரு ஃபைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டை வந்தடைந்தது தெரியவந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்னாரைச் சேர்ந்த சப்ரீன், ”பட்டினிச் சாவில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டு பகுதியில் வந்திறங்கினோம். அங்கு எங்களை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மணல் திட்டில் குழந்தைகளுடன் படுத்துக் கொண்டோம். இரண்டு நாட்கள் கடும் குளிர் காற்றில் உணவின்றி குழந்தைகளுடன் தவித்தோம். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரினோம். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்து பின் கடலோர காவற்படை போலீசார் எங்களை பத்திரமாக மீட்டனர்” என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பின், அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.