கொக்குத்தொடுவாயில் சிங்களவர்களுக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழர்களின் காணிகள்!

கொக்குத்தொடுவாய் அக்கரை வெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி இவ்வாறு சிங்களவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

அவற்றைப் பிரதேச செயலகத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இந்த முயற்சி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டதுடன் அமைச்சரவையிலும் மேற்படி நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் 30 ஏக்கர் வீதம் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் மகாவலி அதிகார சபையால் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காணிகள் 1984ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவையாக இருந்துள்ளன. 

காணிகளில் உள்ள பற்றைகளை கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிங்களவர்கள் துப்புரவு செய்ய முற்பட்டபோதே காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் மேலதிக செயலர் தலைமையில் இடம்பெற்ற’ சூம்’ கலந்துரையாடலில் மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகார சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை என்று மறுத்துள்ள நிலையில் எதிர்வரும் 3ஆம் திகதி நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளது.