சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 37 பேருக்கு பிணை.

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள், அந்நாட்டு கடலோரக் காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிக்கும் 16 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 35 பெரியவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு குறித்த 41 பேரும் நாடு கடத்தப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் நேற்று இரவு விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இடம்பெயர்வு முயற்சியில் நேரடியாக ஈடுபட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.