வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (16) இரவு 10.45 மணி அளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே குறித்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.