முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாளைய தினம் தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக் செல்ல எண்ணியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல உள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தகவல் எதனையும் வெளியிடவில்லை.
தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க என கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி வோல்ட் ஸ்ட்ரீட் ஊடகத்திற்கு போட்டியளித்த ரணில் விக்ரமசிங்க, “கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான காலம் இது என நான் நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.