ஜீப் ரக வண்டி விபத்து. ;  21 வயதுடைய சாரதி பலி.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய டொமினிக் அனுஷன் ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த  பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (16.11.2022) இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (17.11.2022) அதிகாலையிலேயே அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் விபத்தை கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த போது, சாரதி ஜீப்பிலேயே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பில் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.