தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்துவைக்கவில்லை – பிரிட்டிஸ் அமைச்சர்

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை பிரிட்டனின் அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.சர்வதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சாரா சம்பியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் ஜெசே நோர்மன் இதனை தெரிவித்துள்ளார்.

டியாகோ கார்சியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் எவ்வேளையிலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இலங்கைக்கு 60 பேர் சுயவிருப்பத்துடன் விமானம் மூலம் சென்றுள்ளனர்  இதற்கு பிரிட்டன் உதவியுள்ளது,என தெரிவித்துள்ள அமைச்சர் பிரிட்டிஸ் இந்து சமுத்திர பகுதியிலிருந்து அவர்கள் புறப்படுவதற்கு உதவுவதற்கு பிரிட்டன் எப்போதும் தயாராகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்கள்நாட்டிற்கு திரும்பியதும் துன்புறுத்தலிற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்யும் தனது சர்வதேச சட்ட கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும் பிரிட்டன் அக்கறையாக உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 100 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் இந்து சமுத்திரத்தின் பிரிட்டிஸ் தீவான டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ளனர்.2011 ஒக்டோபர் மூன்றாம் திகதி 20 சிறுவர்கள் உட்பட 89 பேருடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட படகை  பிரிட்டிஸ் படையினர் மீட்டிருந்தனர்.இதன் பின்னர் இந்த வருடம் மே ஜூன் மாதங்களில் மேலும் இரண்டு படகுகளில்வந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.