டெல்லியில் ஜப்பான் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.

டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவிற்காக இந்தியா வந்திருந்த ஜப்பான் பெண் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்தார்.

ஹோலி கொண்டாட்டங்களை பார்ப்பதற்காக வெளியே வந்த ஜப்பான் பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டு அவர் மீது வர்ணங்களை பூசியதோடு, தலையில் முட்டையும் உடைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இதுகுறித்து, அதேப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பங்களாதேஷ் சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

வங்காள தேசம் புறப்பட்டுச் சென்ற அவர் இந்தியா மிகச்சிறந்த நாடு என்றும் ஹோலி அருமையான பண்டிகை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஹோலிக் கொண்டாட்டத்தின் போது சில இளைஞர்கள் அவரை மானபங்கப்படுத்த முயன்றதாகவும் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகவும் அந்தப் பெண் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் புகார் ஏதும் அளிக்காத போதும் காவல்துறையினர் தாமாக விசாரணை மேற்கொண்டு வீடியோ காட்சியின் அடிப்படையில் சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.