தகாத உறவுக்கு அழைத்து பணம் பறித்த இளம்பெண்

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாகம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (50). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 12-ம் தேதியன்று அவர் கடையில் இருந்தபோது, இளம்பெண் ஒருவர் தன் பெயர் வனிதா (19) என்றும், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், பெற்றோர்கள் இல்லாத அவர் வில்லியனூர் கணவாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வருவதாகவும், உறவினர்களுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும் கருணாகரன் வீட்டின் மேல் பகுதியில் காலியாக உள்ள அறையை தமக்கு வாடகைக்கு தரும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு தன்னை வந்து பார்க்கும்படி கருணாகரன் கூறியதால், அவரது செல்போன் எண்ணை பெற்றுள்ளார் வனிதா. இதைத்தொடர்ந்து வனிதா, கருணாகரனுக்கு ஃபோன் செய்து பேசி வந்துள்ளார்.

தினமும் மணி கணக்காக பேசி வந்த வனிதா, அவரை வெளியில் அழைத்துள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது வெளியில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த சூழலில் அந்த பெண் இரவு நேரத்தில் இவரை தனியாக அழைத்துள்ளார். இவரும், உடனே சம்பவத்தன்று இரவு தனது பைக்கில் இந்த பெண்ணை கூட்டி கொண்டு வில்லியனூர் கணூவாப்பேட்டை பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ் அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது இவர், தனது ஆடைகளை கழற்றியுள்ளார். அந்த சமயத்தில் அங்கே மறைந்திருந்த கும்பல் ஒன்று, இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை அந்த இடத்தில் வைத்தே பிடித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தங்களுக்கு உடனே ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி பணம் தரவில்லை இந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த நபர் தான் கொண்டு வந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்ததோடு, தனது நண்பரிடம் கால் செய்து ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். பின்னரே அவர்கள் கருணாகரனை விட்டுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய கருணாகரன், உடனே இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பணம் அனுப்பிய ஜி-பே எண்ணை தடயமாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருணாகரனிடம் பணப்பரிப்பில் ஈடுப்பட்டது கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ் (21) மற்றும் ராமு (22) என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண் வனிதா, ராமுவின் மனைவியின் நண்பர் என்று தெரியவந்தது. மேலும் அவரை வைத்து ஒரு திட்டம் தீட்டி இந்த பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவி வனிதா மற்றும் அவரது கூட்டாளி அருண் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.