தமிழரசுக் கட்சி இரண்டுபட்டுள்ளது. உடைவைச் சந்திக்கப்போகிறது. நிச்சயமாக உடைந்து விடும். ஒரு அணி சுமந்திரன் தலைமையிலும் மறு அணி சிறிதரன் தலைமையிலும் பிளவு படும் எனப் பலரும் பேசுவதைக் காண முடிகிறது.
இதைப் பலரும் நம்புகிறார்கள்.
தமிழரசுக் கட்சியின் அபிமானிகள் பயப்பட வேண்டியதில்லை. அதனுடைய எதிராளிகள் மகிழ்ச்சியடைய முடியாது. அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை.
உண்மையென்னவென்றால் யாரும் கருதுவதைப்போல ஆழமான பிளவோ பிரச்சினையோ அதற்குள் இல்லை. வெளியே தெரிவதெல்லாம் அப்படியான ஒரு மாயத் தோற்றமே!
அப்படியென்றால், நீதிமன்றத்தில் வழக்கு நிற்கிறதே என்று யாரும் கேட்கலாம்.
அந்த வழக்கு எப்படி நடக்கிறது என்று ஆழமாகப் பார்த்தால் குழப்பமே இல்லை.
இதெல்லாம் அதனுடைய அரசியல் (தேவையாகும்) நாடகமாகும். அரசியல் சித்து விளையாட்டாகும்.
நீண்டகாலமாகவே தொடரும் தமிழரசுக் கட்சியின் இயல்பும் அரசியல் உத்தியும் இதுதான்.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றைத் தெரிந்தோருக்கும் அதனைக் கூர்ந்து பார்க்கின்றவர்களுக்கும் இதொன்றும் புதியதில்லை என்று விளங்கும்.
ஏனென்றால் அது எப்போதும் இரட்டை நிலைப்பாட்டையே கொண்டது. மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களிலும் அது ஆட்சியாளர்களுடன் மென்போக்கை அல்லது இணக்கத்தைக் கொண்டிருப்பதேயாகும். மறுபக்கத்தில் அது தமிழ் மக்களுக்காக, தமிழின விடுதலைக்காகப் பெரிய தியாகத்தைச் செய்வதாகக் காட்டிக் கொள்ளும்.
இந்த இரட்டை நிலைப்பாட்டை மறைத்துக் கொள்வதற்காக அது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை முன்னிறுத்தும். தேவைப்படும்போதெல்லாம் “தந்தை செல்வாவின் கட்சி” என்று சொல்லித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். 2009 க்குப் பிறகு செல்வநாயகத்தோடு விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனையும் சேர்த்துக் கொண்டது.
பல தேர்தல் மேடைகளிலும் செல்வநாயகத்தின் பெயரும் பிரபாகரனின் பெயரும் உச்சரிக்கப்படும். 2002 இல் பிரபாகரனே வீட்டுச் சின்னத்தைத் தேர்வு செய்தார் என்று தமிழரசுக் கட்சியினர் அடிக்கடி சொல்வதை இங்கே நினைவுபடுத்தலாம்.
1960 களில் அரசாங்கத்தில் பங்குபற்றி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது தமிழரசுக் கட்சியின் வரலாறாகும்.
பின்னரும் அப்படித்தான் இணங்கியும் சமாளித்தும் நடந்ததே அதனுடைய கதை.
1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணிதான் சற்று அரச எதிர்ப்பைக் காட்டியது. அதுவும் 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு இணங்கி, அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது.
இதை அன்று அத்தனை விடுதலை இயக்கங்களும் எதிர்த்தன. கனகரத்தினம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோர் கொல்லப்பட்டனர். இயக்கங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் கூட்டணியிலிருந்த அனைவரும் தப்பியோடித் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். இதில் தற்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் சேர்த்தி.
1980 களின் இறுதியில் ( இலங்கை இந்திய உடன்படிக்கையோடு) கொழும்புக்குத் திரும்பிய கூட்டணியினர் (தமிழரசுக் கட்சியினர்) கொழும்புடன் நெருக்கமாகவே இருந்தனர்.
அதனால்தான் விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் கொல்ல வேண்டியிருந்தது. முதற் தாக்குதலில் சிவசிதம்பரம் தப்பியிருந்தார்.
2000 இல் விடுதலைப்புலிகளின் கீழ் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரும்வரையில் தமிழரசுக் கட்சி கொழும்புக்கு நெருக்கமாகவே இருந்தது. (தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, புலிகளைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள், இயக்கங்கள் எல்லாமும் கொழும்புடன் நெருங்கியே இருந்தன).
2000 இலிருந்து 2009 வரையிலும் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்த தமிழரசுக் கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு)மெல்ல மெல்ல அரசின் பக்கமாகச் சரியத் தொடங்கியது. ஆனாலும் வெளியே அது தமிழ்த்தேசியத்தின் காவலனாகக் காட்டிக் கொண்டது.
நல்லாட்சி என்ற மைத்திரி – ரணில் கூட்டாட்சிக் காலத்தில் ( 2015 இல் ) அரசாங்கத்துக்கு மிக இணங்கிய எதிர்க்கட்சியாக தமிழரசுக் கட்சி இருந்தது எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க உண்மையாகும். அதற்குள் ஒரு அணி அரச ஆதரவாகவும் இன்னொரு அணி அரச எதிர்ப்பாகவும் காணப்பட்டது.
இதைத் தவறு என்று அப்பொழுதும் சரி இப்போதும் சரி சிறிதரனோ அவருடன் சேர்ந்தவர்களோ சொல்லவும் இல்லை. அதை எதிர்க்கவும் இல்லை. எதிர்த்து வெளி நடப்புச் செய்யவும் இல்லை.
ஆனால், அதை விமர்சித்தனர். அவ்வளவுதான்.
அதைத்தான் இப்போதும் செய்கின்றனர். இனியும் செய்வர். பிரிந்து கொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் பிளவு, மோதல் போல மக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் காட்டிக் கொள்வர்.
இதன்மூலம் தம்மை எப்போதும் பேசு பொருளாகவே வைத்திருப்பர்.
அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழரசுக் கட்சிக்குப் பெரிய வெற்றியே.
தமிழரசுக் கட்சிக்குள் என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என்று அறியும் ஆவலைச் சுற்றி உருவாக்குவதே இதனுடைய நோக்காகும்.
மறுபக்கத்தில் அது தன்பாட்டில் தன்னுடைய காரியங்களைச் செய்து கொண்டிருக்கும். காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும்.
இப்போது நடந்து கொண்டிருப்பதும் இதுவே.
இதேவேளை விரும்பியவர் விரும்பிய தரப்பை ஆதரிக்கலாம். விரும்பாதவர் மறுதரப்பை எதிர்க்கலாம். இரண்டுக்கும் தாராளமாக இடமுண்டு. யாரும் வெளியே போகத் தேவையில்லை.
இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம், இதொரு ஜனநாயகக் கட்சி. எவர் வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் எப்படியும் முன்வைக்கலாம். அது அவரவருக்கான உரிமையாகும் என.
மட்டுமல்ல, இதைப்போலவே ஒரு அணி (சிறிதரன், அரியநேத்திரன், சொலமன் சூ. சிறில் போன்றவர்கள்) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும். விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியே தாம் என்று காட்ட முற்படும். அந்தத் தொடர்ச்சியை முன்னெடுப்பதே தமிழரின் அரசியலாகும் என்று கூறும்.
இதற்கு மாறாக மற்ற அணி புலிகளை விமர்சிக்கும். புலிகள் தவறு விட்டதாகக் கூறும். புலிகள் வேறு தாம் வேறு எனக் கூறும்.
இப்படி இருப்பதால் புலிகளை ஆதரிப்போரும் தமிழரசுக் கட்சியில் இருப்பார்கள். அவர்களை எதிர்ப்போரும் இருப்பார்கள்.
அரச ஆதரவு – அரச எதிர்ப்பு, தீவிரத் தமிழ்த் தமிழ்த்தேசிய நிலைப்பாடு, மென் தமிழ்த்தேசிய நிலைப்பாடு, இந்திய ஆதரவு – இந்திய எதிர்ப்பு, நடைமுறை அரசியல் – கற்பனாவாத அரசியல் என இரண்டு முகமுடையதாக தமிழரசுக் கட்சியின் பயணம் தொடரும்.
இப்படி இரு நிலைப்பட்டிருப்பதன் மூலமாக இரு நிலைப்பட்டவர்களின் – இரு தரப்பினரின் வாக்குகளும் கிடைக்கும். இரு தரப்பினருடைய ஆதரவையும் பெறலாம்.
அதுவே நிகழ்கிறது…..
இதொரு தந்திரோபாயமாகும்.
இதனால் உண்மையில் தமிழரசுக் கட்சி எத்தகைய நிலைப்பாட்டில் இயங்குகிறது என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லவே முடியாது.
இப்போது கூட அது இரு நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஒரு அணி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. மறு அணி தமிழ்ப்பொது வேட்பாளரின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்கிறது.
இரண்டும் வெளிப்படையாகவே நடக்கின்றன. ஒரு ஒளிவு மறைவும் கிடையாது.
வெளியே இருந்து பார்ப்போருக்கு உண்மையில் தமிழரசுக் கட்சி யாரை ஆதரிக்கிறது என்பதையிட்டுக் குழப்பமே ஏற்படும்.
ஆனால், இரண்டு வழிகளில் அதனுடைய ஆதரவு நிகழ்ந்தேறும்.
காய் என்றால் காய். பழம் என்றால் பழம்.
தமிழ்த்தேசியத்தின் பக்கமாக, தமிழின விடுதலைக்காக, இனப்பற்றுக்காகவும் தமிழரசுக் கட்சி நிற்கிறது.
சிங்கள மக்களைப் பகைத்துக் கொள்ளாமல், இன ஐக்கியத்தை வலியுறுத்திக் கொண்டும் நிற்கிறது.
இதையெல்லாம் விளங்கிக் கொள்வதற்கு இனியொருவர் பிறந்துதான் வர வேணும்.
இதற்குள் தமிழரசுக் கட்சியை வழிக்குக் கொண்டு வரவேணும் என்று சிலர் வெளியே பாடாய்ப்படுகிறார்கள். அதில் யாழ்ப்பாணத்துப் பத்திரிகையும் ஒன்று. தினமும் அதனுடைய ஆசிரியர் இந்தக் கவலையைக் கொட்டித் தீர்த்துக் கொண்டேயிருக்கிறார்.