திலினி பிரியமாலியிடம் விசாரணையில் சிக்கிய பிரபல தனியார் வங்கிகள்.

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியால் பல கோடி ரூபாய் மோசடிக்கு வழிவகுத்த பல தனியார் வங்கி நிதி நிறுவனங்கள் மற்றும் அடமான நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிக்குகள் என பலரிடம் பல கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் என்பன அடமான நிறுவனங்கள் ஊடாக திலினி பிரியமாலிக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திலினி பிரியமாலிக்கு அந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் ஒரு குழுவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட 3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திலினி பிரியமாலி இந்த நிறுவனங்களின் ஊடாக மாற்றியுள்ளார்.

சந்தேகநபருக்கு இவ்வளவு பெரிய தொகை பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும், அவர் அதை வைப்பு செய்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் விசாரணை செய்யாதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் தனது திகோ குழும வர்த்தகத்தை நடத்தி வந்த உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள மூன்று தனியார் வங்கிகளுடன் நேரடியாக பாரிய பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரின் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அந்த வங்கிகளின் தலைவர்கள் பலர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிர்வரும் காலங்களில் அழைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.