துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 23 பேர் பலி.

இலங்கையில் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதி வரை 23 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாத்திரம் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் இருவர் உயிரிழந்தனர்.

04 ஆம் திகதி காலை கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணை ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய  பகுதிகளில் 04 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 34 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காலி  – அஹங்கம கொவியாபான பகுதியில் 04 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.