தேசிய பூங்காவில் மயில் விருந்து ; யூடியூப்பினால் சிக்கிய ஆதிவாசிகள்!

சில வருடங்களுக்கு முன்னர் மாதுரு ஓயா தேசிய பூங்காவில் நுழைந்து மயில் ஒன்றை வேட்டையாடி, அதை நெருப்பில் சுட்டு உண்டு, வீடியோவாக பதிவு செய்து யூடியூப் வீடியோவாக வெளியிட்ட சம்பவம் தொடர்பில், மஹியங்கன தம்பன பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் 5 பேர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பறவையை வில் அம்புகளால் வேட்டையாடி, தீ மூட்டி இறைச்சியை சுட்டு உண்டது, அதை காணொளியாக பதிவு செய்து யூடியூப் வீடியோவாக வெளியிட்டது உள்ளிட்ட  குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

5 ஆதிவாசிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (13) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் 2019 அல்லது 2020ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாகவும், தம்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பூர்வீக குடிமக்கள் வெளிநாட்டவருடன் இணைந்து இந்தக் குற்றச் செயலைச் செய்துள்ளதாகவும் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது தான் அவதானிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்ட பறவையான மயிலை அம்புகளால் வேட்டையாடி தீ வைத்து உண்ணும் காணொளியை 80 இலட்சத்திற்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.