தேயிலை தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வில்   சிறந்த கொழுந்து பறிப்பாளர் தெரிவு

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதிப் போட்டி நானுஓயா ரதல்ல தேயிலை மலையில் நேற்று (25) நடைபெற்றது.

ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள 60 தோட்டங்களில் ஆரம்பகட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றி பெற்றவர்களில் இருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

20 நிமிடங்களில் அதிகமாக கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் தலவாக்கலை, பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் பிரிவைச் சேர்ந்த  ஆர்.சீதையம்மா முதலிடத்தை பெற்றார்.

அவர் மூன்று பிள்ளைகளின் தாயும், 37 வயதுடையவரும் ஆவார்.

அவர் 20 நிமிடங்களுக்குள் 10 கிலோ 450 கிராம் கொழுந்தை பறித்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்றதனால் 3 லட்சம் ரூபா பணப்பரிசும் தங்கப்பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.  

இந்த போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான் பண்டித்தகே, நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான் ராஜதுரை உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.