தொடரூந்துடன் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ரஷ்ய பெண் உட்பட இருவர் பலி.

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று (1) முச்சக்கரவண்டியொன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹபராதுவ, தலவெல்ல – மஹரம்ப தொடரூந்து கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 62 வயதான முச்சக்கரவண்டியின் சாரதியும், ரஷ்ய பிரஜையான பெண்ணொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்த பெண் தனது பிள்ளையை முன்பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தொடரூந்து கடவையில் உள்ள கடவை தடுப்பு இயங்கவில்லை என்றும், அது தொடர்பில் வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் குறித்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.