தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தெருக்குரல் அறிவு

தான் எழுதி, உருவாக்கிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தெருக்குரல் அறிவு எழுதி, உருவாக்கிய Enjoy Enjaami பாடல், பல்வேறு இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

விழாவில் இந்தப் பாடலை பாடகி தீயும் மாரியம்மாளும் பாடினர். இந்தப் பாடல் ஆல்பமாக வெளிவந்தபோது அதில் இடம்பெற்றிருந்த தெருக்குரல் அறிவு இந்த விழாவில் இடம்பெறவில்லை. இந்தப் பாடல் நிகழ்த்தப்பட்ட தருணத்திலேயே, அறிவு அதில் இடம்பெறாதது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தப் பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து தெருக்குரல் அறிவு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “Enjoy Enjaami பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன். இது ஒரு அணி இணைந்து செய்த மிகப் பெரிய வேலை என்பதில் சந்தேகமில்லை. இதற்காக எல்லோரும் ஒன்றாக செயல்பட வேண்டுமென்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக அது வள்ளியம்மாளின் வரலாறு இல்லையென்றோ என்னுடைய முன்னோரான நிலமற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வரலாறு இல்லையென்றோ ஆகிவிடாது. என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் தலைமுறை தாண்டிய அடக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்தப் பாடலில் இருந்ததைப் போலவே.

இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன. முன்னோர்களின் மூச்சை, வலியை, வாழ்க்கையை, அன்பை, எதிர்ப்பை, ஒட்டுமொத்தமாக அவர்களுடைய இருப்பைச் சுமந்துவரும் பாடல்கள். இவையெல்லாம் அழகிய பாடல்களாக உங்களுடன் பேசுகின்றன. ஒரு தலைமுறையின் ரத்தத்தையும் வியர்வையையும் விடுதலையளிக்கும் கலையின் பாடல்களாக மாறியிருக்கிறோம். அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை பாடல்களின் மூலமாக எடுத்துச் செல்கிறோம்.

நீங்கள் தூங்கும்போது உங்கள் சொத்தை யாராவது பறித்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் வாய்மையே வெல்லும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.