நாடாளுமன்றில் கூட்டமைப்பு கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 2,000 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையில் எழுந்து நின்று பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 2000 ஆம் நாளை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில், குறித்த விடயத்தை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம் 2,000 ஆம் நாளை எட்டியுள்ளதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம் 2000 ஆம் நாளை எட்டியுள்ளதை குறிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, நேரலை ஒளிபரப்பு சபாநாயகரை நோக்கி மாற்றப்பட்ட நிலையில், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் சபையின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.