நியூசிலாந்திடம் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணி

T20 உலகக் கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-01 இல் நடைபெற்ற தொடரின் 27ஆவது போட்டியில், நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

சிட்னி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில், நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக க்ளென் பிலிப்ஸ் 104 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், ராஜித 2 விக்கெட்டுகளையும் தீக்ஷன, தனஞ்சய, ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்ரிகள் அடங்களாக, 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.