வவுனியா நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கத்தில் இருக்கின்றோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர்மலை விடயம் தொடர்பில் இன்று(18) தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”தமிழர் பாரம்பரியமானதும், மிகவும் தொன்மையானதுமான ஆதிசிவன் ஐயனார் கோயில் காலங்காலமாக சைவ தமிழர்களால் பூஜை வழிபாடுகள் செய்து வந்த தலமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு குருந்தூர் மலை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் கட்டளையின்படி புதிய கட்டுமானங்கள் அமைக்கக் கூடாது என்ற கட்டளையோடு இன்னும் பல கட்டளைகள் அதனுள் அடங்கும்.
கடந்த மாதம் 12ஆம் திகதி மிக பெரியளவில் புத்தர் சிலை அமைக்கும் நோக்கத்தில் பௌத்த மத திணிப்பு நடவடிக்கைகளை குறித்த ஆலயத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அன்றைய தினம் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்து இந்த பௌத்த மத திணிப்பு முயற்சிகளை நிறுத்தினர்.
இவர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு நான்கு நாட்களுக்கு பின்னர் நானும், குமுழமுனை கிராம மக்களான சசிகுமார், சிறீஸ்கந்தராசா ஆகியோரும் 2018ஆம் ஆண்டு வழக்கின் கட்டளைக்கு எதிரான வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதாக நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு தாக்கல் செய்தோம்.
முல்லைத்தீவு சட்டத்தரணிகள் மிகவும் சிறப்பான முறையிலே குறித்த தவணைகளில் வாதாடினார்கள்.
அதாவது கடந்த மாதம் 23ஆம் திகதி ஒரு தவணையும் , கடந்த மாதம் 30ஆம் திகதி ஒரு தவணையுமாக இரண்டு தவணைகள் போடப்பட்டு அதற்கான விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
மேலும் இந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து சில கட்டளைகளை பிறப்பித்தார்.
குருந்தூர் மலைப்பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரைகள், சிலைகள், சுருபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும், அகற்றப்பட வேண்டும் என்ற கட்டளையும், அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றிய பின்னர் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பாரம்பரிய குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் பூஜை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும் பிறப்பித்தார்.
அடுத்து குறித்த பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக காணப்படுவதனால் அது தொடர்பான ஆய்வு அறிக்கைகளை தொல்லியல் திணைக்களத்துக்கு விடுமாறு அறிவித்தல் விடப்பட்டது.
தொடர்ந்து அந்த கட்டளையிலே குறித்த இடத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படாத வகையில் பொலிஸார் தமது பாதுகாப்பினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இவை தான் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.
இதற்கு அடுத்ததாக பொலிஸார் இந்த நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்ற நிலையை நாங்கள் எதிர்பார்த்து குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்ற ஒரு எண்ணத்தோடு இருக்கிறோம்.
ஏனென்றால் எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் செய்யாமல் இருந்தால், பொலிஸார் நீதிமன்ற கட்டளைகளை மீறுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் திரும்பவும் நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கத்தில் இருக்கின்றோம்.”என மேலும் தெரிவித்தார்.