நெடுந்தீவில் ஐவர் படுகொலை : கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேகநபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.

அதன் அடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் தலைமை பொலிஸ் அதிகாரி மேனன் தலைமையிலான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்பின் நெறிப்படுத்தலில் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12 ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.