பொது சுகாதார பரிசோதகர் (PHI) துப்பாக்கிச் சூட்டில் மரணம்

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கரந்தெனிய பிரதேச பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்த  51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ரொஷான் குமார, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்குகளை நடத்துவதில் மிக முக்கிய பங்காற்றுபவர் என, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சந்தேகநபர்களை கைது செய்ய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.