பொலிசாரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு. ; 6 பேர் பலி.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணி அளவில் பொலிசார் சென்றனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் பொலிசாரை அனுப்பும்படி தகவல் கொடுத்தனர்.

பண்ணை வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு  பொலிஸ் அதிகாரிகள்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அப்போது, அந்த நபர் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் பொலிசார் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்த மோதலில் 2 பொலிசார், 1 பொதுமக்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சில பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது.

பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.